ஹர்திக் பாண்டியா உடல்நிலை குறித்து மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

Updated: Wed, Nov 01 2023 22:01 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நாளை மும்பை மைதானத்தில் இலங்கை அணியை எதிர்த்து ஏழாவது போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி அடையும் பட்சத்தில் அதிகாரப்பூர்வமாக முதல் அணியாக நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி சுற்றுக்குள் நுழையும்.

இலங்கை அணிக்கு ஏறக்குறைய அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்பு முடிந்துவிட்டது என்று கூறலாம். இந்த நிலையில் இந்திய அணிகள் மாற்று வீரரே இல்லாத வீரராக இருக்கும் ஹர்திக் பாண்டியா காயத்தின் காரணமாக இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்பது உறுதியான தகவல். ஆனால் அவர் காயத்தின் தன்மை எவ்வளவு இருக்கிறது? அவர் மேற்கொண்டு உலக கோப்பையில் விளையாடுவாரா? என்கின்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு நேர்மறையான பதிலை கூறியிருக்கிறார்.  இதுகுறித்து பேசிய அவர், “ஹர்திக் பாண்டியா விஷயம் மிகவும் பாசிட்டிவாக இருக்கிறது. அவர் தற்போது காயத்திற்கான மறுவாழ்வில் இருக்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் என்ன செய்தாலும், தேசிய கிரிக்கெட் அகாடமியில் கிடைத்த செய்திகள் நேர்மறையானவை.

ஹர்திக் பாண்டியாவுக்கு ஏற்பட்டு இருப்பது ஒரு விதத்தில் காயம். இது ஒவ்வொரு நாளும் எவ்வளவு மேம்பட்டு இருக்கிறது என்பது குறித்து நாம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர் எவ்வளவு பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மேற்கொள்கிறார் என்று தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதைப் பார்த்து தான் நாம் முடிவு எடுக்க முடியும். உலகக் கோப்பையில் ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை போட்டி இருக்கிறது.

அவர் முறையான பயிற்சிகளை மேற்கொண்டு முழுமையாக குணமடைந்து விடுவார் என்று நம்புகிறோம். தற்போதைய அளவுக்கு என்னால் இவ்வளவு தான் இந்த விஷயத்தில் சொல்ல முடியும். நான் எனது பேட்டிங்கை ரசிக்கிறேன். அணியை சிறந்த நிலைக்கு கொண்டு வர விரும்புகிறேன். அதனால் அணிக்கு நல்ல ஒரு தொடக்கத்தை கொண்டு வருவதை பொறுப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை