இந்திய ரசிகர்களை நான் அப்படி பேசியிருக்கக் கூடாது - ஹாரி ப்ரூக் வருத்தம்!

Updated: Wed, Dec 06 2023 19:51 IST
Image Source: Google

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறுகிறது. அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் வீரர் ஹரி ப்ரூக் நல்ல தொகைக்குப் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022 அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதால் இங்கிலாந்துக்காக அறிமுகமான அவர் பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் அடித்து 3 – 0 என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு உதவினார்.

மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற பிஎஸ்எல் தொடரில் அசத்தியதால் விராட் கோலி போல இங்கிலாந்துக்காக அசத்துவார் என்று அவரை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாராட்டினார். இந்நிலையில் ஐபிஎல் 2023 ஏலத்தில் 13.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஹைதராபாத்துக்காக வாங்கப்பட்ட ஹரி ப்ரூக் பாகிஸ்தானில் அசத்தினாலும் இந்திய மைதானங்களில் எளிதாக அசத்தி விட முடியாது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் அதற்கு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் 55 பந்துகளில் சதமடித்த அவர் போட்டியின் முடிவில் “இந்திய ரசிகர்களின் வாயை மூடியதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று வெளிப்படையாக பேசி பதிலடி கொடுத்தார். ஆனால் அதன் பின் மோசமாக விளையாடிய அவர் 2023 சீசனில் மொத்தமாக வெறும் 190 ரன்களை 21 என்ற மோசமான சராசரியில் எடுத்து ஹைதராபாத் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததால் ரசிகர்கள் கலாய்த்து தள்ளினார்கள்.

இந்நிலையில் கடந்த சீசனில் இந்திய ரசிகர்களை முட்டாள்தனமாக அப்படி பேசியிருக்கக் கூடாது என்று தெரிவிக்கும் ஹரி ப்ரூக் இது பற்றி சமீபத்திய பேட்டியில் வருத்தத்துடன் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,“நான் ஒரு முட்டாள். அன்றைய நேர்காணலில் அந்த முட்டாள்தனமான விஷயத்தை சொன்னேன். அதற்காக நான் கொஞ்சம் வருத்தப்படுகிறேன்.

 

இந்தியாவில் ஹோட்டல் அருகில் அமர்ந்திருக்கும் போது நீங்கள் இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டீர்கள். அதில் நான் பார்க்க விரும்பாத சில விஷயங்களைக் கண்டேன். எனவே அதிலிருந்து விலகி இருப்பதே நல்ல ஐடியா என்று நினைத்தேன். இப்போது அந்த பக்கங்களை நிர்வகிப்பதற்காக ஒரு நபரை வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை