ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் - ஹசன் அலி!

Updated: Mon, Nov 27 2023 21:48 IST
Image Source: Google

ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐ மூலமாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இதுவரை 16  சீசன்களை கடந்த வெற்றிகரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்க இருக்கிறது.

இதற்கான மினி ஏலம் முதல் முறையாக துபாயில் வரும் டிசம்பர் 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து நேற்று இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.

மேலும், அணிகளுக்கு இடையில் டிரேட் முறையில் வீரர்களை மாற்றி கொள்ள வரும் டிசம்பர் 12 ஆம் தேதி கடைசி நாளாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. ஏற்கனவே தக்க வைக்கப்பட்ட ஒவ்வொரு அணியும், டிரேட் முறையில் மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. டிரேட் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் கேப்டனான ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள தேவ்தத் படிக்கல் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும், லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மாற்றப்பட்டனர். இந்நிலையில், நடந்து முடிந்த 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று 6 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஹசன் அலி, ஐபிஎல் தொடர்களில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் விளையாட விரும்புகிறார்கள், அங்கு விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம். இது உலகின் மிகப்பெரிய லீக் தொடர்களில் ஒன்றாகும். எதிர்காலத்தில் ஐபிஎல் தொடர்களில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் நான் நிச்சயமாக விளையாடுவேன்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் முதல் சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் அணியில் இடம் பெற்றிருந்தனர். அதில், சோயிப் மாலிக், சோயிப் அக்தர், கம்ரான் அக்மல், சோஹைல் தன்வீர், ஷாகித் அஃப்ரிடி உள்பட பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் இடம் பெற்றிருந்தனர். ஆனால், 2009 ஆம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை