ஹர்திக் பாண்டியா குறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி!

Updated: Sun, Jul 17 2022 13:48 IST
Image Source: Google

இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் தனது அபாரமான திறமையால் அற்புதமாக செயல்பட்டு ஒருசில சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் ஒரு வழியாக இந்தியாவின் நீண்டகால தேடலான தரமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிடைத்துவிட்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

குஜராத்தை சேர்ந்த இவரை உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டதால் கடந்த 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களது அணிக்கு அவரது சகோதரருடன் சேர்த்து வாங்கியது. அங்கு மிகச் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினாலேயே அடுத்த வருடமே சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

அதனால் இந்தியாவுக்கும் ஐபிஎல் தொடரிலும் நீக்க முடியாத முதன்மை ஆல்-ரவுண்டராக உருவெடுத்த அவர் கடந்த 2019 உலகக்கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் பந்துவீச முடியாமல் தவித்தார். குறிப்பாக 2021 ஐபிஎல் சீசனில் பந்து வீச முடியாமல் தடுமாறிய அவர் பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்ட போதிலும் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என்பதற்காக துபாயில் நடந்த டி20 உலக கோப்பையில் தேர்வு குழுவினர் அவரை தேர்வு செய்தனர். 

ஆனால் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு ஓவர் கூட பந்து வீசாத அவர் அந்த உலகக்கோப்பை முழுவதும் பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

அதனால் கடுப்பான தேர்வுக்குழு முழுமையாக குணமடைந்து பந்துவீசும் வரை அணியில் இடமில்லை என்று உலகக்கோப்பையுடன் அதிரடியாக நீக்கியது. அதே காரணத்தால் ஐபிஎல் 2022 தொடரின் ஏலத்துக்கு முன்பாக அவரை வளர்த்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் தக்கவைக்காமல் கழற்றி விட்டது அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. 

ஏனெனில் 2015 – 2021 வரையிலான கால கட்டத்தில் அந்த அணி 3 கோப்பையை வெல்வதற்கு ஒரு ஆல்-ரவுண்டராகவும் கடைசி நேரத்தில் கீரன் பொல்லார்ட் உடன் இணைந்து களமிறங்கி நிறைய போட்டிகளை வென்று கொடுத்த பினிஷெராகவும் முக்கிய பங்காற்றினார்.

இருப்பினும் 4 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கமுடியும் என்ற நிலைமையில் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோரை மும்பை தக்க வைத்தது. அந்த நிலைமையில் தன்னை 15 கோடி என்ற பெரிய தொகைக்கு அதுவும் கேப்டனாக நம்பி வாங்கிய தனது சொந்த மாநிலத்து அணியான குஜராத்துக்கு கடுமையாக உழைத்து பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் அட்டகாசமாக செயல்பட்ட அவர் அனுபவமற்ற கேப்டன்சிப் பொறுப்பில் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் ஐபிஎல் கோப்பையை வென்று தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சாதித்துக் காட்டினார்.

அதன் காரணமாக ஒரு கட்டத்தில் அதிரடியாக நீக்கிய அதே தேர்வுகுழு தற்போது தாமாக முன்வந்து தேர்வு செய்யும் அளவுக்கு அசத்திய அவர் தென் ஆப்ரிக்க தொடரில் அபாரமாக செயல்பட்டு அயர்லாந்து தொடரில் கேப்டனாகவும் கோப்பையை வென்று கொடுத்து தற்போதைய இங்கிலாந்து தொடரிலும் அசத்தி வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மும்பை நிர்வாகம் தன்னை தக்க வைக்காமல் விட்டதால் ஹர்திக் பாண்டியா கடும் அதிர்ச்சியடைந்ததாக முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, “மும்பை அவரைத் தக்கவைக்காததால் அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். அது அவருக்கு கடினமான தருணமாக அமைந்தது. இஷான் கிசான், ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, சூரியகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா என 5 தரமான வீரர்களில் 3 பேரை தேர்வு செய்யும் இக்கட்டான சூழ்நிலை மும்பைக்கு ஏற்பட்டது. இஷான் கிசான் ஏலத்தில் வாங்கப்பட்டார்.

அதன்பின் குஜராத் அணியால் வாங்கப்பட்ட அவருக்கு கேப்டன்ஷிப் எனும் எக்ஸ்ட்ரா பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த பொறுப்பான வேலையை இந்த உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அவர் அபாரமாக செய்தார். கேப்டன்ஷிப் பொறுப்பு வந்ததும் பேட்டிங் மற்றும் பவுலிங் என்பதையும் தாண்டி அவர் முற்றிலும் வேறுபட்ட நல்ல கிரிக்கெட் வீரராக உருவாக்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை