விதிமுறையை மீறியதாக ஹென்ரிச் கிளாசெனுக்கு அபராதம் விதித்த ஐசிசி!

Updated: Fri, Dec 20 2024 20:42 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களைக் குவித்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 80 ரன்களையும், பாபர் ஆசாம் 7 பவுண்டரிகளுடன் 73 ரன்களையும் இறுதியில் அதிரடியாக விளையாடிய காம்ரன் குலாம் 25 பந்துகளில் அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 63 ரன்களையும் குவித்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் அறிமுக வீரர் குவேனா மபாகா 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். 

இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென் 97 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில்  ஆட்டமிழந்ததால் அந்த அணி 43.1 ஓவர்களில் 248 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரீடி 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் இப்போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ஹென்ரிச் கிளாசெனுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி இப்போட்டியில் 97 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்த ஹென்ரிச் கிளாசென் விரக்தியில் ஸ்டம்புகளை காலால் எட்டி உதைத்தார். இது ஐசிசி விதிமுறைகளுக்கு எதிரானதாகும். அதன்படி இது ஐசிசி விதிமுறை 2.2 -ன் படி இது குற்றமாகும். 

Also Read: Funding To Save Test Cricket

இதன் காரணமாக ஹென்ரிச் கிளாசெனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், ஒரு கரும்புள்ளியையும் வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேலும் இதனை ஹென்ரிச் கிளாசெனும் ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரணைக்கு வர தேவையில்லை என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை