SA20 League: சதமடித்து மிரட்டிய கிளாசென்; கேப்பிட்டல்ஸுக்கு 255 டார்கெட்!

Updated: Sun, Feb 05 2023 22:50 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் முதல் சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 28ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய டர்பர்ன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் குயின்டன் டி காக் - பென் மெக்டர்மோட் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தது. தொடர்ந்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய டி காக் 20 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து மற்றொரு முனையில் அதிரடியில் மிரட்டிய பென் மெக்டர்மோட்டும் 24 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 41 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதவுசெய்ததுடன், அணியின் ரன் வேகத்தையும் அதிகரித்தார். 

ஆனால் மறுமுனையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வில்லி, வியான் முல்டர் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதையடுத்து களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கி, ஹென்ரிச் கிளாசெனுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் 43 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் எஸ்ஏ20 லீக் தொடரில் சதமடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் எஸ்ஏ20 லீக் தொடரில் அதிவேக சதத்தைப் பதிவுசெய்த நபர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதன்மூலம் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்றிச் கிளாசென் 44 பந்துகளில் 10 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 104 ரன்களையும், மேத்யூ பிரீட்ஸ்கி 21 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 46 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை