நாளை ரிஷப் பந்த் மீண்டும் களத்திற்கு திரும்புவார் - ரோஹித் சர்மா!

Updated: Thu, Oct 17 2024 19:43 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதன்படி இன்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும், ரிஷப் பந்த் 20 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியிலும் கேப்டன் டாம் லதேம் 15 ரன்களுடன் தனது விக்கெட்டை இழந்தர். பின்னர் இணைந்த டெவான் கான்வே - வில் யங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் கடந்து அசத்திய டெவான் கான்வே 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல் வில் யங்கும் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் இணைந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 22 ரன்களையும், டேரில் மிட்செல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயமடைந்து, களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதன் காரணமாக துருவ் ஜூரெல் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இந்நிலையில் ரிஷப் பந்தின் காயம் குறித்து பேசிய ரோஹித் சர்மா, “ரிஷப் பந்திற்கு ஏற்கெனவே அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ள காலில் மீண்டும் பந்து நேரடியாக தாக்கியது. அந்தக் காலில் பந்து தாக்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக அவர் வெளியேற்றப்பட்டார்.

Also Read: Funding To Save Test Cricket

மேலும் அவரது காயமானது பெரிதளவில் இல்லை என்பதால், நாளைய போட்டியில் அவர் மீண்டும் களத்திற்கு திரும்புவார்” என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அணியின் கேப்டனாக நாங்கள் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானதை பார்க்கும்போது நான் மிகவும் வேதனைப்படுகிறேன், ஏனெனில் இங்கு முதலில் பேட்டிங் செய்யலாம் என்பது என்னுடைய முடிவு தான். ஆனால் ஒரு வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முடிவுகள் இது போல் சாதகமாக இல்லை என்றாலும் பரவாயில்லை” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை