கேஎல் ராகுலுக்கு காயம்; போட்டியில் பங்கேற்பாரா?

Updated: Wed, Dec 21 2022 20:46 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் கடைசி டெஸ்டையும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி உள்ளது.

கடைசி டெஸ்டில் இந்தியா வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாகும். இந்த நிலையில் கே எல் ராகுல் அண்மைக்காலமாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடவில்லை. டி20 உலக கோப்பையில் இரண்டு அரை சதம் ,வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்ததற்கு பிறகு கே எல் ராகுல் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மேலும் டெஸ்ட் அணியில் சுப்மான் கில் சதம் அடித்திருப்பதால் ரோஹித் சர்மா வந்தால் கே எல் ராகுல் இடத்திற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இரண்டாவது டெஸ்டில் அவர் பெரிய ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இந்த நிலையில் மிர்பூர் டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராகுல் பந்தை எதிர்கொள்ளும் போது அவருடைய கைவிரலில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதன் அடுத்து வலியால் துடித்த ராகுலுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ராகுல் காயம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார். ராகுலின் காயம் பயப்படும் வகையில் இல்லை என்று குறிப்பிட்ட ரத்தோர், எனினும் அவர் பங்கேற்பது குறித்து மருத்துவர்கள் அறிக்கை தான் முடிவு செய்யும் என்று குறிப்பிட்டார்.

இதனால் கே எல் ராகுல் நாளைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால், இந்திய அணிக்கு புஜாரா தலைமை தாங்குவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று கே எல் ராகுல் இடத்திற்கு தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெங்கால் அணிக்காக விளையாடி வரும் அபிமன்யு ஈஸ்வரன் அறிமுக வீரராக விளையாட வாய்ப்பு தரப்படும். எனினும் ராகுல் காயத்துடன் விளையாடவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை