உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள்!
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைப்பெற்று முடிந்தது. இந்தப் போட்டியின் முடிவில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மேலும் இப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலுமே சரியாக செயல்படவில்லை. முன்னதக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், அடிலெய்டு டெஸ்ட்டில் மிகவும் மோசமான தோல்வியை இந்திய அணி தழுவியுள்ளது. இதனால் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர்கள் மீதான விமர்சனங்களுக்கும் அதிகரித்துள்ளன.
மேலும் இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த அணி தற்சமயம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்ற கேள்வியிலும் மாட்டியுள்ளது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான வழிகள் குறித்து இப்பதிவில் நாம் பார்ப்போம்.
அதன்படி இந்திய அணி இத்தொட்ரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமெனில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கக்கூடாது. அந்தவகையில் இந்திய அணி இத்தொடரை 4-1 அல்லது 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
ஒருவேளை எஞ்சியுள்ள போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் தோல்வியைத் தழுவினால் கூட பிற அணிகளின் வெற்றி தோல்வியை கணக்கில் கொண்ட இந்திய அணியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு உறுதியாகும். அந்தவகையில் இந்திய அணி இத்தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றியை ஈட்ட வேண்டும்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் இந்த தொடரை இந்திய அணி 2-2 என சமநிலையில் முடிக்கும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியும் அல்லது இரண்டு போட்டிகளையும் டிரா செய்தால் மட்டுமே இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பானது கிடைக்கும். ஒருவேளை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இத்தொடரை இழக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை முழுமையாக வீழ்த்தியும், அஸ்திரேலிய அணி இலங்கை அணியை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணிக்கான வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.