சதம் அடித்தேனா இல்லையா என்பது முக்கியமல்ல - ஷுப்மன் கில்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 9 லீக் போட்டிகளிலும் வென்று அரையிறுதியில் நியூசிலாந்தை தோற்கடித்துள்ளது. இதன் மூலம் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ள இந்தியா 2011 போல கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்கு இறுதிக்கட்டமாக தயாராகி வருகிறது.
முன்னதாக மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 117, ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்த உதவியுடன் 398 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய நியூசிலாந்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் 69, டெரில் மிட்சேல் 134 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் 327 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்து வெளியேறியது.
இந்த வெற்றிக்கு 7 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக அப்போட்டியில் 47 ரன்கள் குவித்த கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான துவக்கத்தை கொடுத்து அவுட்டான பின் தம்முடைய பங்கிற்கு அட்டகாசமாக விளையாடிய சுப்மன் கில் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 80* (66) ரன்கள் எடுத்ததால் சதத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மும்பையில் மதிய நேரத்தில் நிலவே அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாமல் தடுமாறிய அவர் பாதியிலேயே பெவிலியன் திரும்பியதால் அரையிறுதியில் போன்ற மிகப்பெரிய போட்டியில் சதத்தை அடித்து சாதனை படைக்கும் வாய்ப்பை 20 ரன்களில் தவற விட்டார். இந்நிலையில் இந்த உலகக்கோப்பையின் தொடக்கத்திலேயே சந்தித்த அதிகப்படியான காய்ச்சலின் தாக்கம் தான் இப்போட்டியில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட போது வெயில் தாங்க முடியாமல் தாம் வெளியேறியதற்கான காரணம் என்று ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஒருவேளை நான் தசைப்பிடிப்பை சந்திக்காமல் இருந்திருந்தால் 100 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் நான் 100 ரன்கள் அடிக்கிறேனா இல்லையா என்பதை தாண்டி நாங்கள் அடிக்க நினைத்த 400 ரன்களை ஏறத்தாழ தொட்டது முக்கியமாகும். குறிப்பாக 25 – 30 ஓவர்களுக்குள் எங்களால் முடிந்த ரன்களை அடித்து விட வேண்டும் என்று நினைத்தோம்.
எனவே சதம் அடித்தேனா இல்லையா என்பது முக்கியமல்ல. மைதானத்தில் நிலவிய அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் காய்ச்சலால் இவை ஏற்பட்டது என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார். முன்னதாக இந்த உலகக்கோப்பையில் விராட் கோலி, ரோஹித்தை விட அதிக ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கில் காய்ச்சல் வந்த பின் சற்று தடுமாற்றமாகவே செயல்படுவது குறிப்பிடத்தக்கது.