மழைக்கு பின் ஆடுகளம் ராஞ்சி மைதானத்தின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Sun, May 19 2024 13:16 IST
மழைக்கு பின் ஆடுகளம் ராஞ்சி மைதானத்தின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்! (Image Source: Google)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் விராட் கோலி 47 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அரைசதம் கடந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 54 ரன்கள் சேர்த்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டனார். அதன்பின் களமிறங்கிய விரர்களில் ராஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 41 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 14, கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் ஏதுமின்றியும், டேரில் மிட்செல் 3 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ரச்சின் ரவீந்திரா - அஜிங்கியா ரஹானே இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரஹானே 33 ரன்களுக்கும், ரச்சின் ரவீந்திரா 61 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் இறுதிவரை போராடிய மகேந்திர சிங் தோனி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 25 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களை சேர்த்த போதும், சிஎஸ்கே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “சொந்த மைதானத்தில் லீக் சுற்றின் கடைசி போட்டியை வெற்றியுடன் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. நான் விளையாடிய மைதானங்களில் முதலில் பேட்டிங் செய்ய மிகவும் கடினமானதாக இந்த ஆடுகளம் இருந்தது. மழை இடைவேளை முடிந்து திரும்பி வந்த பிறகு நானும் விராட்டும் 140-150 என்று பேசிக் கொண்டிருந்தோம். மேலும் ஆடுகளத்தில் அதிகளவு மழை காரணமாக நடுவர்கள் ஆட்டத்தை விரைவாக நடத்த ஆலோசனை நடத்தி வந்தனர்.

மழைக்கு பிறகு மீண்டும் விளையாடிய போது ஆடுகளம் ராஞ்சி மைதானத்தின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல இருந்தது. அதை மிட்செல் சான்ட்னரிடம் சொன்னேன். கடந்த ஆறு போட்டிகளாக எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் எங்கள் ரன் ரேட்டையும் சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இப்போட்டியில் நாங்கள் எதிரணியை 175 ரன்களில் சுருட்ட வேண்டும் என்று எண்ணினோம். அதனை ஒரு கட்டத்தில் எங்களால் செய்ய முடியும் என்றே தோன்றியது. 

ஆனால் இலக்கு சற்று நெருக்கமாக இருந்த போது தோனி களத்தில் இருந்தார். பலமுறை வெற்றிகரமாக அதை அவர் செய்துள்ளார் என எண்ணினேன். ஈரமான பந்தில் எங்களது பந்துவீச்சை மாற்ற முயற்சித்தோம். என்னுடைய ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு நான் வழங்க விரும்புகிறேன். அவர் பந்துவீசிய விதம் நம்பமுடியாததாக இருந்தது. அதற்கு அவர் தகுதியானவர். கடைசி ஓவர் வீசுவதற்கு முன்னதாக பந்தில் அதிகம் ஃபேஸ் வேண்டாம் என அவரிடம் சொன்னேன். அவரது திறனை நம்புமாறு சொன்னேன்.

முதல் பந்தில் யார்க்கர் முயற்சித்தார். அடுத்தடுத்த பந்துகளில் வேகத்தை குறைத்து பந்துவீசினார். அது எங்களுக்கு பலன் தந்தது. எங்களுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு ‘லேப் ஆஃப் ஹானர்’ தர விரும்பினோம். எங்களது முதல் இலக்கு 6 போட்டிகளிலும் வெற்றிபெற்று நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைவது. இதை இந்த நேரத்தில் அனுபவிப்பது அவசியம். ஆனால், நாளை மீண்டும் அடுத்த போட்டிகாக எங்களை தயார்செய்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை