விராட் கோலி ஒன்றும் சதத்திற்காக விளையாடவில்லை - உண்மையை உடைத்த கேஎல் ராகுல்!
இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தங்களது நான்காவது ஆட்டத்தில், நான்காவது வெற்றியை, விராட் கோலியின் சதத்துடன் நிறைவு செய்து அசத்தியிருக்கிறது. இன்றைய போட்டியில் பேட்டிங் செய்ய சாதகமான புனே ஆடுகளத்தில், வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து மிகச் சிறப்பாக தொடங்கினார்கள்.
ஆனால் மேற்கொண்டு மிடில் ஓவர்களில் அவர்களால் இந்திய அணியின் புத்திசாலித்தனமான பந்துவீச்சை எதிர்கொண்டு ரன்கள் எடுக்க முடியவில்லை. ஜடேஜா, பும்ரா மற்றும் குல்தீப் அவர்களை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள். இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்கள் மற்றும் 53 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தந்தார்கள். இதற்கு அடுத்து விராட் கோலியுடன் கேஎல்ராகுல் இணைந்து விளையாட ஆரம்பித்தார்.
விராட் கோலி 84 ரன்கள் எடுத்திருந்த பொழுது, அணியின் வெற்றிக்கு 14 ரன்கள்தான் தேவைப்பட்டது. அங்கிருந்து விராட் கோலி தான் மட்டும் விளையாடி, மேற்கொண்டு 19 ரன்கள் சேர்த்து, சதம் அடித்து 103 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வென்றார். இந்தப் போட்டியில் விராட் கோலி தன்னுடைய சதத்திற்காக விளையாடியதாகத்தான் எல்லோரும் என ரசிகர்கள் விமர்சித்தனர்.
ஆட்டநாயகன் விருதை வென்ற பொழுது கூட அரை சதங்களாக அடித்துக் கொண்டிருக்கிறேன் அதை முடித்து வைக்க விரும்பினேன் என்பதாகத்தான் விராட் கோலி கூறி இருந்தார். இந்த நிலையில் களத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பேசிய கேஎல் ராகுல், “நான்தான் விராட் கோலியை சிங்கிள் எடுக்க வேண்டாம் என்று சொன்னேன். அப்படி செய்தால் மக்கள் சதத்திற்காக விளையாடுவதாக தவறாக நினைப்பார்கள் என்று விராட் கோலி என்னிடம் சொன்னார்.
நான் அவரிடம், நாம் எளிதாக ஜெயிக்க கூடிய இடத்தில் இருக்கிறோம், எனவே இந்த நேரத்தில் நீங்கள் சதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி, அவரை சதம் எடுக்க வைத்தேன்” என்று உண்மையை வெளிப்படுத்தினார். ஆனால் இது தெரியாத ரசிகர்கள் விராட் கோலி கூறியதைப் போலவே அவர் சதத்திற்காக விளையாடி அணியின் ரன் ரேட்டை குறைத்துவிட்டார் என விமர்சனங்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது