ரோஹித் பிட்னஸ் விஷயத்தில் முன்னேற வேண்டும் - சல்மான் பட் சாடல்!

Updated: Wed, May 31 2023 14:27 IST
I don't know why Indian captain isn't fit enough: Salman Butt! (Image Source: Google)

16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதோடு தோனி கேப்டனாக தனது 5 ஆவது கோப்பையை கைப்பற்றி ரோஹித் சர்மாவுடன் அதிகமுறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை பகிர்ந்துகொண்டார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகியோரை ஒப்பிட்டு பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “தற்போதைய கிரிக்கெட் உலகம் மிகவும் வித்தியாசமானது. தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் இன்றளவும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டு அவருக்கு மூட்டு பகுதியில் காயம் இருந்தாலும் அவர் இந்த தொடரில் விளையாடி முடித்து விட்டார். அதேவேளையில் தோனியை போன்ற இடத்தில் நீங்கள் இல்லை. உங்களுடைய நிலை வேறு ரோஹித் சர்மா என்ற நீங்கள் தான் இந்திய அணியின் கேப்டன். எனவே வீரர்களுக்கு அனைத்து துறைகளிலுமே நீங்கள் தான் ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக உங்களுடைய பிட்னஸ்ஸில் நீங்கள் இன்னும் அதிகம் உழைக்க வேண்டும்.

ஏனெனில் ஒரு கேப்டனாக நீங்கள் நல்ல பிட்னஸ்சுடன் இருந்தால் தான் உங்களால் ரன்களை குவிக்க முடியும். அதோடு உங்களுடைய ஆட்டம் தான் உங்களுக்கு நம்பிக்கையை தரும். உங்களை பார்த்து தான் அணியில் உள்ள மற்ற வீரர்கள் ஊக்கம் பெறுவார்கள். இப்படி முக்கிய இடத்தில் இருக்கும் நீங்களே பிட்னஸ் விடயத்தில் அக்கறை இல்லாமல் இருப்பது தவறு. நிச்சயம் உங்களது பிட்னஸ் விஷயத்தில் இன்னும் நீங்கள் பெரிய அளவில் முன்னேற்றத்தை காணவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஒருவகையில் சல்மான் பட் சொல்வதும் உண்மைதான். ஏனெனில் தோனி தற்போது 41 வயதில் இருந்தாலும் இன்றளவும் பின் வரிசையில் களமிறங்கி அதிரடி காட்டுகிறார். அதோடு ஸ்டம்பிற்கு பின்னால் நின்று தனது வித்தைகளை காட்டி வருகிறார். அதேவேளையில் ரோஹித் சர்மா களத்தில் அவ்வளவு சுறுசுறுப்பாக காணப்படுவதில்லை. எனவே ரோஹித் சாரம் நிச்சயம் தனது உடற்தகுதியில் முன்னேற்றத்தை காணவேண்டும் என ரசிகர்களும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை