எங்களது செயல்பாடுகள் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்டவை - ஜோ ரூட்!
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பேசியுள்ள ஜோ ரூட், “என்னைப் பற்றி எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் கடைசி டெஸ்ட் போட்டி வரை நான் இருக்க விரும்பும் இடத்திற்கு கீழே தான் இருந்தேன். நான் இத்தொடரில் ரன்களை குவிக்க தடுமாறினே. மேலும் இத்தொடரில் என்னால் எதிர்பார்த்த அளவு பங்களிப்பை வழங்க முடியவில்லை. அதேசமயம் இந்தியா எப்போதும் நான் பேட்டிங் செய்ய விரும்பும் ஒரு இடமாக இருந்துள்ளது.
இதற்குமுன் நாங்கள் இங்கு வெற்றிகளைப் பெற்றுள்ளோம். நான் எப்போதும் அணிக்காக முன் நின்று விளையாட முயற்சித்தேன். நான் ராஞ்சியில் இருந்த சூழ்நிலையையும், அங்குள்ள நிலைமைகளையும் புரிந்து அதற்கு ஏற்றது போல் விளையாடினேன். ஆனால் அதனை நான் இத்தொடர் முழுவதும் செய்திருக்க வேண்டும். இதனால் நான் நிலைமையை புரிந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
இந்த தோல்வி குறித்து அணி 'வருந்துவதாக' நான் நினைக்கவில்லை. பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகப் பொறுப்பேற்றது மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியாளராக வந்ததிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பார்த்தால், குறிப்பாக எங்கள் பேட்டிங் வரிசை, முழுவதுமான நிலைத்தன்மை மற்றும் சில தனிப்பட்ட செயல்பாடுகள் அதற்கு முன்பு இருந்ததற்கு முற்றிலும் மாறுபட்டவை. அது ஒருவீரர் அதிரடியாக விளையாடுவது மட்டும் அல்ல, அது ஒவ்வொரு வீரரும் எப்படி சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை பொறுத்தது.
இந்தத் தொடருக்கு முன்பு எங்களுக்குத் தெரியாத விஷயங்களைக் கண்டுபிடித்துள்ளோம். இன்னும் நீண்ட காலப் பார்வையை எடுத்துக் கொண்டால், முன்னோக்கிச் செல்லும் நல்ல இடத்தில் நம்மை அமைத்துள்ள விஷயங்கள் உள்ளன. வெளிப்படையாக கூறவேண்டும் எனில் நீங்கள் முடிவுகளை வைத்து தீர்மானிப்பதை காட்டிலும், அதில் இருக்கும் நல்ல விஷயங்களையும் நாம் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.