நான் இதற்கு முன்பு இந்த சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறேன் - தீப்தி சர்மா
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று சௌத்தாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சோஃபியா டங்க்லி 83 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் அணியில் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சோபிக்க தவறிய நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தீப்தி சர்மா 62 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 48.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய தீப்தி சர்மா ஆட்டநாயகி விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய தீப்தி சர்மா, “நான் இதற்கு முன்பு இந்த சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறேன், முடிந்தவரை அமைதியாகவும் நிதானமாகவும் இருந்தால் இந்த இலக்கை எட்ட முடியும் என்பது எனக்குத் தெரியும்.
நான் ஜெமிமா ரோட்ரிக்ஸுடன் பேட்டிங் செய்யும்போது ஒரு கூட்டணியை உருவாக்குவதில் கவனம் செலுத்தினோம். அது எங்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எங்களின் திட்டம் தெளிவாக இருந்தது. ஒரு ஓவருக்கு 5-6 ரன்களை எடுத்தாஅல், இந்த இலக்கை நெருங்கிச் செல்ல முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதைத் தான் திட்டமிட்டோம், அதைத்தான் செய்தோம். மேலும் ஜேமிமா ஆட்டமிழந்த நிலையிலும் எனக்கு பதற்றமில்லை.
Also Read: LIVE Cricket Score
நான் களத்தில் இருந்தால், இந்த இலக்கை எட்டி ஆட்டத்தை முடிக்க முடியும் என்று எனக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. எனவே, நான் அதில் அதிக கவனம் செலுத்தி வந்தேன்/ மேலும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை பொருத்தவரையில், ஒரு அணியாக இலங்கை மற்றும் இந்தியாவில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. அதனால், உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.