அட்டவணையை தயாரிப்பதில் ஐசிசி தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும் - பென் ஸ்டோக்ஸ்!
பென் ஸ்டோக்ஸ் தாலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி அடுத்தாடுத்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை ஈட்டிவருகிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் நடந்துமுடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா, மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியத்துவம் இல்லாத போட்டிகள் அதிகமாக நடைபெற்று வருவதாக கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “பல்வேறு டி20 தொடர்களால் டெஸ்ட் கிரிக்கெட் அதன் முக்கியத்துவத்தை ரசிகர்களிடையே இழந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட் குறித்து பேசி வரும் பொதுவான கருத்து எனக்கு பிடிக்கவில்லை. அதனால் போட்டியை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற வேண்டும் என நினைத்தேன். டெஸ்ட் கிரிக்கெட் தாண்டி பல்வேறு வீரர்களுக்கு பல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தான் பிடிக்கும்.
இந்த டெஸ்டில் என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாமல் மக்கள் போட்டியை பார்க்க நினைத்தால் முதல் பந்து வீசுவதற்கு முன்பு நாங்கள் கிரிக்கெட் வீரராக வெற்றி அடைந்து விட்டோம் என்று நினைக்கிறேன். அட்டவணையை தயாரிப்பதில் ஐசிசி தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். போட்டியை நடத்தணும் என்று நடத்தாமல் அதில் ஒரு முக்கியத்துவத்தை ஐசிசி ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் விளையாடியது. இது தேவையற்ற தொடராகும். இது ரசிகர்களிடையே எந்த கவனத்தையும் பெறவில்லை. இதனால்தான் சொல்கிறேன் அட்டவணை தயாரிக்கும் போது முக்கியத்துவம் இருக்கும் வகையில் போட்டியை நடத்துங்கள்.
இப்போதெல்லாம் போட்டிகள் அதிகமாக நடைபெறுவதால் அனைத்து அணிகளும் ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கு ஒவ்வொரு அணியை தேர்வு செய்கிறார்கள். இது சர்வதேச கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. கிரிக்கெட்டின் தரமும் குறைந்து விடும்” என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அதிக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்திருந்த நிலையில் உலககோப்பை தொடரில் பங்கேற்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் ஓய்வில் இருந்து திரும்பி வரும் முடிவை பென்ஸ்டோக்ஸ் எடுக்க உள்ளார். அதே வேளையில் ஐபிஎல் போட்டிகளிலும் மீண்டும் பங்கேற்க ஸ்டோக்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதனால் அட்டவணையை சரி செய்யும் படி ஐசிசிக்கு ஸ்டோக்ஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.