இந்த வெற்றி எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது - ஹர்திக் பாண்டியா!

Updated: Sun, Sep 17 2023 19:02 IST
இந்த வெற்றி எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் இலங்கை மற்றும் முன்னாள் சாம்பியன் இந்திய ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு குசால் பெரேரா முதல் ஓவரிலேயே பும்ரா வேகத்தில் டக் அவுட்டானார்.

அதை விட நிசாங்கா 2, சமரவிக்ரமா 0, அசலங்கா 0, டீ சில்வா 4, கேப்டன் சனாக்கா 0 என 4 முக்கிய பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கிய முகமது சிராஜ் மொத்த போட்டியையும் தலைகீழாக மாற்றினார். அவருடைய வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாத இலங்கை 15.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 50 ரன்கள் சுருண்டு மோசமான சாதனை படைத்தது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6 விகெட்டுகலை வீழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து 51 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிஷன் 3 பவுண்டரியுடன் 23 ரன்களும், ஷுப்மன் கில் 6 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து 6.1 ஓவரிலேயே இலக்கை எட்ட வைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று கொடுத்தனர். இப்போட்டியில் டாஸை இழந்த இந்திய அணி கேப்டன் ரொஹித் சர்மா பேசும் போது நாங்கள் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட்டிங் செய்யலாம் என நினைத்தோம் என்று கூறினார். 

இது குறித்து பேசிய இந்திய அணி துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய அணி வெற்றி குறித்து மகிழ்ச்சியுடன் பல கருத்துக்களை கூறினார். போட்டிக்கு பின்பேசிய ஹர்திக் பாண்டியா, “ஒரு அணியாக ஆட்டத்தை எப்படி முடிக்க வேண்டும் என்று நாங்கள் அதிகம் பேசி இருக்கிறோம். நெருக்கடியான போட்டியில் கூட எதிரணியை எப்படி அடித்து ஆட வேண்டும் என்பது குறித்தும் பலமுறை பேசியிருக்கிறோம். 

நல்ல வேலையாக இந்த போட்டியில் நாங்கள் டாசை இழந்தோம். ஏனெனில் இன்றைய போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருந்தோம். எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக முகமது சிராஜின் பந்துவீச்சு பிரமிக்கும் அளவில் இருந்தது. பந்தை அவர் ஸ்விங் செய்த விதம் எங்களுக்கு விக்கெட் எடுக்க நல்ல வாய்ப்பாக அமைந்தது. பந்து எப்படி வீச வேண்டும்? பேட்ஸ்மேனுக்கு எப்படி நெருக்கடி கொடுக்க வேண்டும். பந்தை எந்த லைனில் வீச வேண்டும் என்பது குறித்து எல்லாம் நாங்கள் அதிக முறை பேசி இருக்கிறோம்.

தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சில ஓவர்களில் பந்து நன்றாக ஸ்விங் ஆகிறது . அந்த சமயத்தில் நாம் எப்படி சிறப்பாக பந்துவீசி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அணி கூட்டத்தில் நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இன்றைய ஆட்டத்தில் முதல் சில ஓவர்களில் நாங்கள் வீசிய பந்து இலங்கை அணியின் பேட்டில் படவேயில்லை. 

அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. முகமது சிராஜ் தன்னுடைய பந்துவீச்சுருக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அது தற்போது அவருடைய பந்துவீச்சில் தெரிகிறது. உலகக்கோப்பை தொடர்க்கும் முன்பு இந்த வெற்றி எங்களுக்கு நிச்சயம் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை