ரன் அப்-பின் பாதியில் பும்ரா என்று நினைத்தேன் - ஃபெர்குசன் குறித்து மார்க் வாக்!
பிக் பேட் லீக் டி20 தொடரின் 14அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் மற்றும் சிட்னி தண்டர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பிரிஸ்பேனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிட்னி தண்டர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சிட்னி தண்டர் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு 50 ரன்களில் டேவிட் வார்னர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் அடுத்து களமிறங்கிய வீரர்களில் டேனியல் கிறிஸ்டன் 23 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் சிட்னி தண்டர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைச் சேர்த்தது.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பிரிஸ்பேன் ஹீட் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவற 43 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமறியது.அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ ரென்ஷா மற்றும் மேக்ஸ் பிரைண்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த மேக்ஸ் பிரைண்ட் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 72 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மேத்யூ ரென்ஷா 48 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பிரிஸ்பேன் ஹீட் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்நிலையில் இப்போட்டியில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் லோக்கி ஃபெர்குசனின் பந்துவீச்சு காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
நேற்றைய போட்டியில் லோக்கி ஃபெர்குசன் தனது பந்துவீச்சின் போது சரியான ரன் அப் கிடைக்காமல் தடுமாறினார். இருப்பினும், அவர் அதனை பொறுட்படுத்தாமல் தன்னால் முடிந்தவரை தன்னைத் திருத்திக் கொண்டு அந்த பந்தை வீசினார். கிரிக்கெட்டில் பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் தங்கள் ரன்-அப்பில் ஏதெனும் அசௌகரியத்தை உணர்ந்தால் உடனே நிறுத்திவிட்டு புதிதாக தொடங்க முனைகிறார்கள், ஆனால் ஃபெர்குசன் அப்படி செய்யாமல் பந்துவீச்சை தொடர்ந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அப்போது வர்ணனையாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியவின் முன்னாள் வீரர் மார்க் வாக், ஃபெர்குசனின் இந்த செயலை கண்டதும், ‘லோக்கி ஃபெர்குசன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் ரன் அப்பை பின்பற்றுகிறாரா?’ என்று ஆச்சரியப்பட்டார். இந்நிலையில் லோக்கி ஃபெர்குசனின் ரன் அப்பை ஜஸ்பிரித் பும்ராவுடன் ஒப்பிட்டு பேசிய மார்க் வாக்கின் காணொளியானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.