எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன் - ரீஸா ஹென்றிக்ஸ்!

Updated: Sun, Oct 22 2023 12:45 IST
எனக்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன் - ரீஸா ஹென்றிக்ஸ்! (Image Source: Google)

உலகக்கோப்பை தொடரில் நேற்று மும்பையில் நடைப்பெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 229 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா தசைப்பிடிப்பு காரணமாக விளையாட முடியாமல் போனதால் எய்டன் மார்க்ரம் கேப்டனாகவும், ரீஸா ஹென்றிக்ஸ் பவுமாவிற்கு பதிலாக மாற்று துவக்க வீரராகவும் களம் இறங்கினார்கள்.

பவுமாவிற்கு பதிலாக களம் இறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றிக்ஸ் 75 பந்துகளில் 85 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா அணியின் ரன் குவிப்பிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இந்நிலையில் இந்த போட்டியில் நான் விளையாடுவேனா என்பது போட்டி ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்னரே எனக்கு தெரியவந்தது என ஹென்றிக்ஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ரீஸா ஹென்றிக்ஸ், “நான் இந்த போட்டியில் விளையாடிய விதத்தை நினைத்து உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய ரன் குவிப்பை நான் துவங்கும் போது சற்று கடினமாக இருந்தாலும் இறுதியில் நல்ல இன்னிங்சை விளையாடியதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் வான்டெர் டுசனுடன் இணைந்து அமைத்த பார்ட்னர்ஷிப் எங்களது அணியின் ரன் குவிப்பிற்கு உதவியது. இந்த போட்டியில் நான் விளையாடுவேனா என்பது போட்டி ஆரம்பிப்பதற்கு ஐந்து நிமிடம் முன்னரே எனக்கு தெரியவந்தது. அனைத்துமே வெகு விரைவாக நடைபெற்று முடிந்தது. பவுமா விளையாடவில்லை என்று தெரிந்ததும் எனக்கான வாய்ப்பு கிடைத்ததும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். 

அந்த வகையில் இந்த போட்டியில் டீ காக் ஆட்டம் இழந்ததும் அடுத்த விக்கெட்டுக்காக பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் நன்றாக விளையாடியதாக உணர்கிறோம். அதேபோன்று மார்க்ரம் மற்றும் மில்லர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த வேளையில் கிளாசன் மற்றும் யான்சன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி எங்களை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை