இந்த ஆட்டம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

Updated: Mon, Nov 27 2023 13:38 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்துமுடிந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதிலும் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இதில் இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், இஷான் கிஷன் 52 ரன்களையும், ரிங்கு சிங் 31 ரன்களையும் எடுக்க, பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், “இந்த ஆட்டம் உண்மையிலேயே எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. நான் என்னுடைய அனைத்து வகையான ஷாட்டுகளையும் இந்த போட்டியில் வெளிப்படுத்த விரும்பினேன். அந்த வகையில் பயமற்று நான் இந்த போட்டியில் விளையாடியதில் மகிழ்ச்சி. அதேபோன்று இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே சூர்யா பாயிடமும், வி.வி.எஸ் லக்ஷ்மணன் இடமும் நான் சுதந்திரமாக விளையாடப் போகிறேன் என்று தெரிவித்தேன்.

அந்த வகையில் அவர்களும் எனது ஆட்டத்திற்கு அனுமதி அளித்தார்கள். கடந்த போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்ததற்கு நான் தான் காரணம். அது முழுக்க முழுக்க என்னுடைய தப்புதான். நான் தவறான அழைப்பு கொடுத்ததனாலே அவர் ரன் அவுட் ஆகினார். அது குறித்து அவரிடம் மன்னிப்பும் கேட்டேன். ஆனால் ருதுராஜ் பாய் மிகவும் தன்மையானவர். போட்டியின் போது இதெல்லாம் நடப்பது சகஜம் தான் நீ உன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று கூறினார்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை