இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நான் ஏற்கவில்லை - விரேந்தர் சேவாக்!
கடந்த 2013ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் இருந்து வருகிறது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என வாய்ப்புகள் அமைந்த போதும் நாக் அவுட் சுற்றில் வெளியேறியது. இதனால் இந்திய அணியில் கேப்டன்கள் மாறியதை போலவே பயிற்சியாளர்களும் மாறிக்கொண்டே தான் வருகிறார்கள். அதில் யாராலும் மறக்கமுடியாத ஒரு மாற்றம் என்றால் அது அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் தான்.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார் அனில் கும்ப்ளே. ஆனால் அப்போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலிக்கும் - கும்ப்ளேவுக்கும் அடிக்கடி மனக்கசப்புகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. இவர்களின் பிரச்சினை பொதுவெளியிலேயே உடைக்கும் அளவிற்கு பெரிதாக இருந்தது. இதனையடுத்து 2017 சாம்பியன்ஸ் கோப்பையில் தோல்வியடைந்த உடனேயே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார்.
அந்த சமயத்தில் புதிய பயிற்சியாளராக சேவாக் நியமிக்கப்படவிருந்தார். ஆனால் இறுதியில் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ளார் விரேந்தர் சேவாக். அதில், “எனக்கு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் எண்ணமே கிடையாது. விராட் கோலி மற்றும் அப்போதைய பிசிசிஐ செயலாளர் அமிதாப் சௌத்ரி ஆகியோர் தான் என்னிடம் கேட்டுக்கொண்டனர். என்னை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, விராட் கோலிக்கும் - கும்ப்ளேவுக்கும் சரியான சூழல் இல்லை என அமிதாப் சௌத்ரி என்னிடம் கூறினார். மேலும் கும்ளேவில் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்தவுடன் என்னை பதவியேற்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் நடந்தவற்றை அனைவரும் அறிவீர்கள் என சேவாக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவுக்காக நான் அளித்த பங்களிப்பே எனக்கு நிறைவாக உள்ளது. அதுவுமே எனக்கு போதும்” என சேவாக் கூறியுள்ளார்.
ஐசிசி கோப்பையை வெல்லாததால் ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு வராமல் ராகுல் டிராவிட்டிற்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவரின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி இந்தாண்டு 2 ஐசிசி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்லலாம், அல்லது இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.