விராட் கோலியைப் பார்த்து இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்- இயன் பிஷப்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் விராட் கோலி 8 பவுண்டரிகளுடன் 87 ரன்களைச் சேர்த்து சதத்தை நோக்கி நகர்ந்துவருகிறார்.
இந்நிலையில் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்கள், விராட் கோலியின் ஆட்டத்தை பார்த்து நுணுக்கங்களை கற்க வேண்டும் என முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயன் பிஷப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வீரர், களத்தில் கிடைக்கும் ஒவ்வொரு ரன்னுக்குமான மதிப்பை அறிந்தவராக செயல்படுகிறார். ரன் எடுக்க டைவ் அடித்து உடலை வருத்தும் அவரது அர்ப்பணிப்பு அதை உங்களுக்கு சொல்லும்.
கரீபியன் மண்ணில் உள்ள இளம் வீரர்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். பவுண்டரி கிடைக்கும் என காத்திருக்க வேண்டாம். அவரை போல ஓட்டம் எடுங்கள். அவரை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.