யு19 உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை இழந்தது இலங்கை!

Updated: Tue, Nov 21 2023 19:26 IST
யு19 உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பை இழந்தது இலங்கை! (Image Source: Google)

இந்தியாவில் நடைப்பெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்த அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே, இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார். 

இதற்கிடையே அரசியல் தலையீடு இருப்பதாக கூறி இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. இதனால் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இலங்கையில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு ஐசிசி மாற்றியுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த முடிவை எடுத்துள்ளது. 

அகமதாபாத்தில் இன்று ஐசிசி வாரியக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வெளியேற்றப்பட்ட தலைவர் ஷம்மி சில்வா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நடந்த விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு இலங்கை கிரிகெட் வாரியம் இடைநிறுத்தப்பட்டதை உறுதி செய்தது. இலங்கை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும். ஆனால் கிரிக்கெட் வாரியம் இடைநிறுத்தப்பட்டது ரத்து செய்யப்படாது என்று வாரியம் தெளிவாக தெரிவித்துள்ளது. 

வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரையில் இலங்கையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை நடக்க இருந்தது. ஆனால் இது தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், ஜனவரி 10 முதல் பிப்ரவரி 10 வரையில் தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ20 லீக் தொடரின் 2ஆவது சீசன் நடக்க இருக்கிறது. எனினும், இரண்டும் ஒரே நேரத்தில் நடப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஏனோக் என்க்வே கூறியுள்ளார். 

அண்டர் 19 உலகக் கோப்பையை நடத்துவதற்கு ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸூம் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தென் ஆப்பிரிக்கா கொண்டுள்ளதால் அங்கு மாற்றியமைக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் வாரியம் இடைநிறுத்தப்பட்டாலும் இலங்கை அணியானது தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் என்று வாரியம் முடிவு செய்தது.

இது குறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் சில்வா, “தொடர்ந்து இலங்கை அணியை விளையாட அனுமதிக்குமாறு ஐசிசியிடம் கோரிக்கை வைகப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உறுப்பினர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதி அளித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த தொடரில் உள்ள அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. சி பிரிவில் ஆஸ்திரேலியா இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய அணிகள் உள்ளன. டி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை