ஐசிசி உலகக்கோப்பை 2023: ஃபகர், ஷஃபிக் அரைசதம்; வங்கதேசத்தைப் பந்தாடியது பாகிஸ்தான்!

Updated: Tue, Oct 31 2023 20:36 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: ஃபகர், ஷஃபிக் அரைசதம்; வங்கதேசத்தைப் பந்தாடியது பாகிஸ்தான்! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் - லிட்டன் தாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தன்ஸித் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து வந்த, நஜ்முல் ஹொசைன் சாண்டோ 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய முஷ்பிக்கூர் ரஹிமும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - மஹ்முதுல்லா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லிட்டன் தாஸ் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்து மஹ்முதுல்லா 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 56 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து இணைந்த கேப்டன் ஷாகிப் அல் ஹசன் - மெஹிதி ஹசன் மிராஸ் இணை ஓரளவு தாக்குபிடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஷாகிப் அல் ஹசன் 43 ரன்களுக்கு ஆட்டமிழ, மெஹிதி ஹசனும் 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த தஸ்கின் அகமதும் முகமது வாசிம் ஜூனியர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  

இதனால் வங்கதேச அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி, முகமது வாசீம் ஜூனியர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுஃப் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - ஃபகர் ஸமான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். 

தொடர்ந்து இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டிற்கு 128 ரன்கள் எடுத்த நிலையில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களை எடுத்திருந்த அப்துல்லா ஷஃபிக் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஃபகர் ஸமான் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 81 ரன்களை எடுத்த நிலையில் மெஹிதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் இணைந்த முகமது ரிஸ்வான் - இஃப்திகார் இணை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 32.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் 6 புள்ளிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை