ஐசிசி உலகக்கோப்பை 2023: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி!

Updated: Fri, Oct 27 2023 22:38 IST
ஐசிசி உலகக்கோப்பை 2023: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி! (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் பாகிஸ்ஹான் - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷஃபிக் 9 ரன்களிலும், இமாம் உல் ஹக் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து மார்கோ ஜான்சென் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஸ்வான் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அஹ்மத் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் பாபர் ஆசாமும் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 50 ரன்கள் எடுத்த் நிலையில் ஷம்ஸி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த சௌத் சகீல் - ஷதாப் கான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய ஷதாப் கான் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அரைசதம் கடந்த சௌத் ஷகில் 52 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களமிறங்கிய முகமது நவாஸும் அதிரடியாக விளையாடி தனது பங்கிற்கு 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய முகமது வாசிம் ஜூனியரும் 7 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அபாரமாக பந்துவீசிய தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களைச் சேர்த்திருந்த குயின்டன் டி காக் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்களில் டெம்பா பவுமாவும் ஆட்டமிழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரஸ்ஸி வெண்டர் டுசெனும் 21 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த அதிரடி வீரர்கள் ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் 12 ரன்களில் ஹென்ரிச் கிளாசென் ஆட்டமிழக்க, அடுத்து வந்து அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 29, மார்கோ ஜான்சென் 20 ரன்கள் என ஓரளவு ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதற்கிடையில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 91 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஜெரால்ட் கோட்ஸியும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

அதன்பின் களமிறங்கிய லுங்கி இங்கிடியும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்கு ஒரு விக்கெட் கையிருப்பில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பாரபரப்பும் தொற்றிக்கொண்டது. இருப்பினும் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேசவ் மகாராஜ் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 47.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது. அதேசமயம் பாகிஸ்தான நியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை