‘ஸ்டாப் கிளாக்’ விதியை கட்டாயமாக்கியது ஐசிசி!

Updated: Fri, Mar 15 2024 19:45 IST
‘ஸ்டாப் கிளாக்’ விதியை கட்டாயமாக்கியது ஐசிசி! (Image Source: Google)

கடந்தாண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அதிலும் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரசிகர்கள் பார்த்த தொடராகவும் இது அமைந்தது. இதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை கூடுதல் சுவாரஸ்யமாக்க ஐசிசி முடிவு செய்தது. அதற்காக புதிய விதிகளை கொண்டு வர ஐசிசி முடிவு செய்திருந்தது.

அதன்படி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே 60 விநாடிகளுக்கு மேலாக 3 முறை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த விதியை டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை சோதனை முறையில் அமல்படுத்த ஐசிசி செயற்குழு கூட்டத்தில்முடிவு எடுக்கப்பட்டது. 

அதன்படி இந்த விதிமுறையானது கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டிஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் மூலம் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறையை ஐசிசி இன்று கட்டாயமாக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ஒரு ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும். மேலும் 60 முதல் 0 வரை எண்ணும் கடிகாரமும் பெரிய திரையில் காட்டப்படும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 2 முறை மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐசிசி இன்று கட்டாயமாக்கியுள்ளது. மேலும் நடப்பாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடர் முதல் இது அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை