ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஷுப்மன் கில் முன்னோற்றம்; பாபர் முதலிடம்!

Updated: Thu, Aug 10 2023 12:08 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் கிரிக்கெட் தொடர்களுக்கு பிறகு தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணத்தில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் நேற்று ஐசிசி புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் ஒருநாள் மட்டும் டி20 கிரிக்கெட் தரவரிசையில் ஏற்பட்ட மாற்றங்களையும் ஐசிசி அட்டவணைப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 886 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர் வேண்டர் டுசன் 777 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்து பாகிஸ்தான் அணியின் அனுபவ வீரரான ஃபகர் ஸமான் 755 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இமாம் உல் ஹக் 745 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் மூன்றாவது போட்டியில் 85 ரன்கள் அடித்ததன் மூலம் தற்போது இரண்டு இடங்கள் முன்னேறி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவே அவரது சிறந்த தரநிலை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இனிவரும் ஒருநாள் போட்டிகளில் அவர் அசத்தும் பட்சத்தில் இன்னும் உச்சத்தை தொட வாய்ப்புள்ளது. அதே வேளையில் இந்த ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்த இஷான் கிஷன் ஒன்பது இடங்கள் உயர்ந்து 36ஆவது இடத்தை பிடித்துள்ளார். அதேபோன்று ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் குல்தீப் யாதவ் மட்டுமே உள்ளார். 

அவர் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்னர் 14 இடங்கள் முன்னேறி பத்தாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை சூர்யகுமார் யாதவ் யாரும் நெருங்க முடியாத இடத்தில் 907 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து முகமது ரிஸ்வான் 811 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். டி20 பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை ரஷீத் கான் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை