அணிக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுப்பவர்களே உண்மையான நம்பர் ஒன் வீரர் ஆவார் - கௌதம் கம்பீர்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த தென் ஆப்பிரிக்கா புள்ளி பட்டியலில் இந்தியாவை முந்தி முதலிடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக விளையாடி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக சௌத் ஷகீல் 52, கேப்டன் பாபர் அசாம் 50 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தப்ரைஸ் ஷம்ஸி 4 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 271 ரன்கள் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஐடன் மார்க்ரம் 91 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனாலும் இதர வீரர்கள் கை கொடுக்க தவறியதால் கேள்விக்குறியான தெனாப்பிரிக்காவின் வெற்றியை கடைசி நேரத்தில் கேசவ் மகாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தில்லாக விளையாடி பெற்றுக் கொடுத்தனர்.
ஏற்கனவே இத்தொடரில் 3 தோல்விகளை பதிவு செய்திருந்த பாகிஸ்தான் இதையும் சேர்த்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலக கோப்பையில் தொடர்ச்சியாக 4 தோல்விகளை பதிவு செய்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக எஞ்சிய 3 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த தோல்விக்கு பேட்டிங்கில் 50 ஓவர்கள் கூட தாக்குப் படிக்க முடியாத அளவுக்கு டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக விளையாடி 300 ரன்கள் கூட எடுக்காததே முக்கிய காரணமாகும். சொல்லப்போனால் இந்த தொடர் முழுவதும் சுமாராக செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் கேப்டன் பாபர் அசாம் வாழ்வா – சாவா என்ற வகையில் நடைபெற்ற இந்த போட்டியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் 50 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானது தோல்விக்கு மற்றொரு காரணமாகும்.
இந்நிலையில் முக்கியமான போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தாத நீங்கள் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்து எத்தனை சாதனைகள் படைத்தாலும் பயனில்லை என்று அவரை கௌதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த உலகக் கோப்பையில் பாபர் அசாம் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த இன்னிங்சிலும் விளையாடவில்லை. என்னைப் பொறுத்த வரை சாதனைகள் மற்றும் தரவரிசை ஆகியவை ஓவர்ரேட்டட் ஆகும். மேலும் அணிக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுப்பவர்களே உண்மையான நம்பர் ஒன் வீரர் ஆவார்” என்று கூறியுள்ளார்.