ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று தர்மசாலாவில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். 

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான வில் யங்க்கும் 17 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமியின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா - டெரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், பார்ட்னர்ஷிப் முறையில் 123 ரன்களையும் சேர்த்து நியூசிலாந்து அணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். 

இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 75 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.  அதனைத்தொடர்ந்து வந்த கேப்டன் டாம் லேதமும் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஆனால் அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெரில் மிட்செல் உலகக்கோப்பை தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

பின்னர் அவருடன் இணைந்து விளையாடிய கிளென் பிலீப்ஸ் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேனும் 6 ரன்களுக்கும், மிட்செல் சாண்ட்னர் ஒரு ரன்னும், மேட் ஹென்றி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.  இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேரில் மிட்செல் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 130 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  இந்திய அணி தரப்பில் அசத்தலாக பந்துவீசிய முகமது ஷமி  5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 46 ரன்கள் எடுத்த நிலையில் லோக்கி ஃபர்குசன் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில்லும் 26 ரன்களில் தனது விக்கெட்டை ஃபர்குசனிடம் இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் வழக்கம்போல ஷார்ட் பந்திற்கு விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அசத்தலாக விளையாடிய கேஎல் ராகுல் 27 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி தனது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

அவருக்கு துணையாக விளையாடிய ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமானது.  மறுப்பக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி 8 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 95 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து 5 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதுடன், சச்சின் டெண்டுகர் சாதனையையும் தவறவிட்டார். 

இருப்பினும் இந்திய அணி 48 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணிக்கெதிராக இந்திய அணி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News