ஐசிசி உலகக்கோப்பை 2023: ஏங்கல்பிரெக்ட், வான் பீக் அரைசதம்; இலங்கைக்கு 262 டார்கெட்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோ ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு விக்ரம்ஜித் சிங் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் மேக்ஸ் ஓடவுட் 16 ரன்களிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய காலின் அக்கர்மேனும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் பாஸ் டி லீட், தேஜா நிடமனுரு கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது ஜோடி சேர்ந்த ஏங்கல்பிரெக்ட் - லோகன் வான் பீக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏங்கல்பிரெக்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏங்கல்பிரெக்ட் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 70 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோகன் வான் பீக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து, உலகக்கோப்பை தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அதன்பின் அதிரடியாக விளையாடிய லோகன் வான் பீக் 59 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்களைச் சேர்த்துள்ளது. இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய தில்சன் மதுஷங்கா, கசுன் ரஜிதா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி அசத்தினர்.