ஐசிசி உலகக்கோப்பை 2023: டெரில் மிட்செல் அபார சதம்; கம்பேக்கில் கலக்கிய முகமது ஷமி!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று தர்மசாலாவில் நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான வில் யங்க்கும் 17 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமியின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா - டெரில் மிட்செல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், பார்ட்னர்ஷிப் முறையில் 123 ரன்களையும் சேர்த்து நியூசிலாந்து அணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 75 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து வந்த கேப்டன் டாம் லேதமும் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஆனால் அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெரில் மிட்செல் உலகக்கோப்பை தொடரில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் அவருடன் இணைந்து விளையாடிய கிளென் பிலீப்ஸ் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மார்க் சாப்மேனும் 6 ரன்களுக்கும், மிட்செல் சாண்ட்னர் ஒரு ரன்னும், மேட் ஹென்றி ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேரில் மிட்செல் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 130 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அசத்தலாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.