ஐசிசி தரவரிசை: புதிய வரலாறு படைத்த ஹாரி டெக்டர்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அயர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இருப்பினும் அந்த அணியின் இளம் வீரர்களின் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக ஹாரி டெக்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரராகவும் திகழ்ந்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்), ரஸ்ஸி வான் டெர்டுசென் (தென் ஆப்பிரிக்கா), ஃபகார் ஸமான் (பாக்.), இமாம்-உல்-ஹக் (பாக்.), ஷுப்மன் கில் (இந்தியா), ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
அதேசமயம் நட்சத்திர வீரர் விராட் கோலி 8ஆவது இடத்தில் உள்ளார். டிகாக் மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இந்நிலையில், வங்கதேச அணிக்கெதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி டெக்டர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசையில் 7ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
முக்கியமாக அயர்லாந்து ஆடவர் கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் எட்டிடாத ஐசிசி தரவரிசையை அவர் எட்டி சாதனை படைத்துள்ளார். அதோடு மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களான ரோஹித் சர்மா, ஸ்டீவ் ஸ்மித், குயின்டன் டி காக், ஜோஸ் பட்லர், விராட் கோலி ஆகியோரை அவர் முந்தியுள்ளார்.