டி20 உலகக்கோப்பை: ஃபார்முக்கு திரும்பிய ராகுல்; மிரட்டிய கோலி!

Updated: Wed, Nov 02 2022 15:16 IST
ICC T20 Rankings: Kholi, Rahul's fifty helps India post a total of 184 on their 20 overs (Image Source: Google)

டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குரூப் 2இல் இடம்பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்த நிலையில், தென் ஆஅப்பிரிக்காவிடம் தோற்றது.

இதுவரை விளையாடி 3 போட்டிகளில் தலா 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும். இந்த போட்டியிலும் வென்று, நெதர்லாந்தையும் கடைசி போட்டியில் வீழ்த்தினால் வலுவாக அரையிறுதிக்கு செல்லும்.

அடிலெய்டில் நடக்கும் இந்தியா - வங்கதேசம் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. தீபக் ஹூடாவிற்கு பதிலாக அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க தடுமாறிய இந்திய அணி, டஸ்கின் அஹ்மதுவின் ஓவரை நிறுத்தி விளையாட முனைந்தது.

ஆனால் இப்போட்டியில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கேப்டன் ரோஹித் சர்மா, தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஏனேனில் அதற்கு முந்தைய ஓவரில் ரோஹித் அடித்த கேட்ச்சை ஹசன் மஹ்முத் தவறவிட்டார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - விராட் கோலி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிலும் சில காலமாக ஃபார்மில் இல்லாமல் இருந்த கேஎல் ராகுல் இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி தள்ளினார். அவருக்கு துணையாக விராட் கோலியும் அதிரடியைக் காட்ட தொடங்கினார். 

இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த 31 பந்துகளில் கேஎல் ராகுல் அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் தனது பங்கிற்கு 16 பந்துகளில் 30 ரன்களைச் சேர்த்து ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சிலேயே விக்கெட்டை இழந்தார். 

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 5 ரன்களோடு பெவிலியன் திரும்ப, மறுமுனையில் விராட் கோலி தனது 36ஆவது சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்தார். மேலும் இந்த உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி விளாசும் மூன்றாவது அரைசதம் இதுவாகும்.

அதன்பின் அதிரடியாக விளையாட தொடங்கிய தினேஷ் கார்த்திக் 7 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த அக்ஸர் படேலும் 7 ரன்களுக்கு நடையைக் கட்டினார். 

அனால் மறுமுனையில் விராட் கோலி பவுண்டரியும், சிக்சருமாக விளாச, ரவிச்சந்திரன் அஸ்வின் நானும் அடிப்பேன் என்பது போல அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி என விளாசி அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை எடுத்தது.

இந்திய அணி தரப்பில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 64 ரன்களுடன் களத்தில் இருந்தார். வங்கதேச தரப்பில் ஹசன் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை