டி20 உலகக்கோப்பை: ஃபார்முக்கு திரும்பிய வில்லியம்சன்; ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்த ஜோஷுவா லிட்டில்!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர்16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
அடிலெய்டில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே, ஃபின் ஆலன் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
பின்னர் 22 ரன்களில் டெவான் கான்வே ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஃபின் ஆலனும் 32 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதற்கிடையில் கிளென் பிலீப்ஸ் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேன் வில்லியம்சன் 31 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவருக்கு துணையாக டெரில் மிட்செலும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
பின் 35 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசிய கேன் வில்லியம்சன் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்மி நீஷம் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் வந்த மிட்செல் சாண்ட்னரும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, ஜூஷுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளைப் பதிவுசெய்து சாதனைப் படைத்தார்.
இது இந்த உலகக்கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்டாகவும் பதிவானது. முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன், இலங்கைக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எடுத்தது. அயர்லாந்து தரப்பில் ஜோஷுவா லிட்டில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.