அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டி ஒன்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு அதார்ஷ் சிங் - அர்ஷின் குல்கர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தன. இதில் அதார்ஷ் சிங் 25 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் குல்கர்னியுடன் இணைந்த முஷீர் கானும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 155 ரன்களைச் சேத்தனர். 

Advertisement

இதில் கடந்த போட்டியைப் போல் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முஷீர் கான் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 73 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஷின் குல்கர்னி தனது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அவருன் இணைந்து விளையாடிய கேப்டன் உதர் சஹாரன் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் சதமடித்த அர்ஷின் குல்கர்னி 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 108 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் பிரியான்ஷு மொலியா 27 ரன்களையும், சச்சின் தாஸ் 20 ரன்களையும், அரவல்லி அவனிஷ் 12 ரன்களையும் சேர்க்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய ஏ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்தது. அமெரிக்க அணி தரப்பில் அதீந்த்ரா சுப்ரமணியன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பிரனாவ் செட்டிபாளையம் 2 ரன்களிலும், பௌவ்யா மெஹ்தா ரன்கள் ஏதுமின்றியும், சித்தார்த் கப்பா 18 ரன்களுக்கும், கேப்டன் ரிஷி ரமேஷ் 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவில்யன் திரும்பினர்.

அதன்பின் இணைந்த ஸ்ரீவஸ்தா - அமோக் அரேபல்லி இணை ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினார். பின் அரைசதத்தை நெருங்கிய ஸ்ரீவஸ்தா 40 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து அமோக் அரேபல்லியும் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் நமன் திவாரி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Advertisement

இதன்மூலம் இந்திய யு19 அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்கா யு19 அணியை வீழ்த்தியதுடன், ஐசிசி யு19 உலகக்கோப்பை தொடரிலும் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து வெற்றிக்கு காரணமாக அமைந்த இந்திய வீரர் அர்ஷின் குல்கர்னி ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News