ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் - துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் துஷார் ரஹேஜா 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான அமித் சாத்விக்கும் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய ராதாகிருஷ்ணன் 10 ரன்களுக்கும், கேப்டன் சாய் கிஷோர் ஒரு ரன்னிற்கும், பாலச்சந்தர் அனிருத் 119 ரன்களுக்கும், முகமது அலி 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் திருப்பூர் அணி 67 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த மான் பாஃப்னா - கனேஷ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி அசத்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மான் பாஃப்னா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

Advertisement

அதேசமயம் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கனேஷ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் 50 ரன்களுடன் மான் பாஃப்னாவும் விக்கெட்டை இழக்க, இறுதியில் ராமலிங்கம் ரோஹித் 13 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணியானது 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை சேர்த்துள்ளது. திருச்சி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அதிசயராஜ் டேவிட்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையடிய திருச்சி அணிக்கு வசீம் அஹ்மத் - ராஜ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர், 

இதில் அதிரடியாக தொடங்கிய வசீம் அஹ்மத் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷயாம் சுந்தார் ஒரு ரன்னிலும், ராஜ் குமார் 8 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய நிர்மல் குமார் ஒருபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் யாதவ் 16 ரன்களிலும், ஜாஃபர் ஜமால் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கி அதிரடியாக விளையாடிய ராஜ் குமாரும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் அணியின் நம்பிக்கையாக இருந்த நிர்மல் குமார் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 46 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 16.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. திருப்பூர் அணி தரப்பில் நடராஜன், அஜித் ராம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News