நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் ஷுப்மன் கில்லை தான் தேர்வு செய்வேன் - ஷிகர் தவான்!
ஐசிசி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி பெயர் பெற்றவர் ஷிகர் தவான். இவர் பல்வேறு ஐசிசி தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் என்ற பெருமை அவருக்கு சொந்தமானது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஷிகர் தவான் 22 சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடி 688 ரன்கள் அடித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான் முக்கிய வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் சொதப்பியதன் காரணமாக அணியில் இருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டார். இதனை அடுத்து இஷான் கிஷன், கில் ஆகியோர் இரட்டை சதம் அடித்த நிலையில் ஷிகர் தவான் தன்னுடைய இடத்தை இழந்தார்.
இதனால் வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் பங்கேற்பதில் சந்தேகமாக இருந்தாலும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷிகர் தவான், “ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் அவரும் பயிற்சியாளர் டிராவிட்டும் என்னை ஒருநாள் போட்டியில் கவனம் செலுத்த கூறினார்கள். 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதையே இலக்காக வைத்து பணியாற்ற சொன்னார்கள். 2022 ஆம் ஆண்டு எனக்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்தது. எனினும் என்னைவிட இளம் வீரர்கள் சிலர் அதிரடியாக விளையாடினார்கள். அதனால் அணியில் என்னுடைய இடத்தை நான் இழக்க நேரிட்டது.
என்னுடைய இடத்தில் களமிறங்கிய ஷுப்மன் கில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். மேலும் இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்தது மூலம் நான் அணியை விட்டு தூக்கப்படுவேன் என நினைத்தேன். கிரிக்கெட்டில் இதுபோன்று நடப்பது முதல் முறை அல்ல.ஒரு வருடம் முழுவதும் சிறப்பாக விளையாடிவிட்டு ஒரு இரு மாதம் மோசமான பார்ம் காரணமாக ரன் குவிக்காமல் இருந்தால் அணியை விட்டு நீக்கப்படுவார்கள்.
ஒரு பயிற்சியாளரும் கேப்டனும் முடிவு எடுத்தால் அதற்குப் பின் பல காரணங்கள் இருக்கும். அதை நான் ஏற்கிறேன். நான் தேர்வு குழு தலைவராக இருந்தால் என்னையும் ஷுப்மன் கில்லையும் வைத்து யாராவது ஒருவரை தான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் நான் ஷுப்மன் கில்லை தான் எடுப்பேன். ஏனென்றால் அவர் இளம் வீரர். என்னைவிட சிறப்பாக செயல்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.