ஐஎல்டி20 2025: எமிரேட்ஸை ஒரு ரன்னில் வீழ்த்தி துபாய் த்ரில் வெற்றி!
உலகெங்கிலும் பல்வேறு வகையான ஃபிரான்சைஸ் லீக் டி20 தொடர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தவகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடரானது கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை இரண்டு சீசன்களைக் கடந்துள்ள இத்தொடரானது தற்போது மூன்றாவது சீசனில் அடியெடுத்துவைத்துள்ளது.
அதன்படி நேற்று தொடங்கிய மூன்றாவது சீசன் ஐஎல்டி20 தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்து துபாய் கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப் 9 ரன்களுக்கும், ஆடம் ரோஸிங்டன் 9 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்முல்லன் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் சிக்கந்தர் ரஸா 19 ரன்களிலும், ரோவ்மன் பாவெல் 25 ரன்களிலும், தசுன் ஷனகா 13 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதற்கிடையில் பொறுப்புடன் விளையாடி வந்த பிராண்டன் மெக்முல்லன் அரைசதம் கடந்த அசத்தியதுடன், 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் ரன்களைச் சேர்க்க தவறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. எம்ஐ எமிரேட்ஸ் தரப்பில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் எளிய இலக்கை நோக்கி விளையாடிய எமிரேட்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் முகமது வாசீம், ஆண்ட்ரே ஃபிளெட்சர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, குசால் பெரேரா 12 ரன்களுக்கும், டாம் பாண்டன் 7 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 23 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் - அகீல் ஹொசைன் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடி வந்தா அகீல் ஹொசைன் 30 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரனும் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்களை எடுத்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் எமிரேட்ஸ் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
Also Read: Funding To Save Test Cricket
அப்போது களத்தில் கீரென் பொல்லார்ட் இருந்த நிலையிலும், அந்த ஓவரில் எமிரேட்ஸ் அணியால் 11 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் எமிரேட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. துபாய் அணி தரப்பில் குல்பதின் நைப் 3 விக்கெட்டுகளையும், ஒல்லி ஸ்டோன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.