ஐஎல்டி20 2024: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தி அபுதாபி நைட் ரைடர்ஸ் வெற்றி!
ஐஎல்டி20 தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் கைல் மேயர்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் மேயர்ஸுடன் இணைந்த ஜோ கிளார்க் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதன்பின் 22 ரன்களை எடுத்திருந்த நிலையில் கைல் மேயர்ஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மைக்கேல் பெப்பர் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அவர்களைத் தொடர்ந்து ஜோ கிளார்க் 32 ரன்களுக்கும், அலிஷான் ஷராஃபு 25 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் லௌரி எவான்ஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லௌரி எவான்ஸ் 39 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 24 ரன்களையும் சேர்க்க அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா வாரியர்ஸ் தரப்பில் டிம் சௌதீ, ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டாம் கொஹ்லர் காட்மோர் ரன்கள் ஏதுமின்றியும், ஜேசன் ராய் 6 ரன்னிலும், ஜான்சன் சார்லஸ் 12 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ரோஹன் முஸ்தஃபா 20 ரன்களையும், கீமோ பால் 21 ரன்னிலும், கேப்டன் டிம் சௌதீ 24 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நைட் ரைடர்ஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் டேவிட் வில்லிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.