ஐஎல்டி20: கோஹ்லர்-காட்மோர் அபார சதம்; ஷார்ஜா வாரியர்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sat, Jan 21 2023 23:09 IST
ILT20: Sharjah Warriors Record Their First Win Riding On Tom Kohler-Cadmore's Breezy Unbeaten Centur (Image Source: Google)

ஐஎல்டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - ஷார்ஜா வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ர ஷார்ஜா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய துபாய் அணியில் ராபின் உத்தப்பா 3 ரன்களிலும், அடுத்து வந்த சிராக் சூரி 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - லாரன்ஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

தொடர்ந்து அபாரமாக விளையாடிய ஜோ ரூட் அரைசதம் கடந்தார். பின் 34 ரன்களில் லாரன்ஸும் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த ரோவ்மன் பாவெல் அதிரடியாக விளையாடி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்தது. இதில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோ ரூட் 80 ரன்களைச் சேர்த்திருந்தார்.

இதனையடுத்து இலக்கை துரத்திய ஷார்ஜா அணியில் தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 ரன்களிலும், அதன்பின் வந்த டேவிட் மாலன் 8 ரன்களிலும், கேப்டன் மொயீன் அலி 15 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். 

இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் டாம் கோஹ்லர்-காட்மோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதில் 47 பந்துகளை எதிர்கொண்ட கோஹ்லர் 10 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 106 ரன்களைச் சேர்த்தார்.

இதன்மூலம் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 14.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த டாம் கோஹ்லர் ஆட்ட நாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை