அணியில் ஒரு வீரராக இருப்பதே மகிழ்ச்சி - ரஷித் கான்
ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சு மூலம் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார். ஐபிஎல், பிக் பாஷ் உள்ளிட்ட ஏராளமான டி20 லீக்கில் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்கிறார்.
சமீபத்தில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டி டி20 அணியின் கேப்டனாக ஹஷ்மதுல்லா ஷாஹிதியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிமியத்தது. அணியின் துணைக் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகின் தலைசிறந்த வீரரை விட்டு ஹஷ்மதுல்லாவை கேப்டனாக நியமித்த ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் கேப்டன் பதவியை விரும்பவில்லை என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஷித் கான்‘‘நான் ஒரு வீரராக சிறந்தவன் என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன். துணைக் கேப்டன் என்பது எனக்கு சிறந்தது. என்னுடைய ஆலோசனை தேவைப்படும் போது, கேப்டனுக்கு உதவியாக இருப்பேன். கேப்டன் பதவியில் இருந்து விலகி இருப்பது எனக்கு சிறந்தது.
ஒரு வீரராக அணிக்கு சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். கேப்டனாக மாறுபட்ட கோணத்தில் யோசிப்பதைவிட, என்னுடைய பணி அணிக்கு மிகவும் சிறந்தது, அணிக்கான எனது செயல்பாடு பாதிக்கப்படும், என்று நான் பயப்படுகிறேன். இதனால் ஒரு வீரராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.