இது அருமையான சுற்றுப்பயணமாக இருக்கும் - இலங்கை தொடர் குறித்து ஸ்டீவ் ஸ்மித்!

Updated: Sat, Jan 11 2025 09:25 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். மேற்கொண்டு இந்திய டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய தொடரில் சோபிக்க தவறிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை.

இருப்பினும் இந்த அணியில் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி மீண்டும் இடம்பிடித்துள்ளார். அவருடன் அறிமுக வீரர் கூப்பர் கன்னொலி, மேத்யூ குஹ்னேமன் மற்றும் டாட் மர்பிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர் ஆகியோருடன் சேர்த்து ஜோஷ் இங்லிஷும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். 

இந்நிலையில் இத்தொடரில் அஸ்திரேலிய அணியை வழிநடத்தவுள்ளது குறித்து பேசிய ஸ்டீவ் ஸ்மித், “பாட் கம்மின்ஸ் இல்லாதபோது எனக்குப் பொறுப்பேற்கக் கிடைக்கும் எந்த வாய்ப்பும் நல்ல வேடிக்கையாக இருக்கும். நான் என் வழியில் சில விஷயங்களைச் செய்ய முயற்சிக்கிறேன். இங்கும் அங்கும் ஓரிரு வாய்ப்புகள் கிடைத்திருப்பது அருமையாக இருந்தது. இது ஒரு அருமையான சுற்றுப்பயணமாக இருக்கும் என நம்புகிறேன்.

மேலும் துணைக்கண்டங்களில் சுழற்பந்துவீச்சை எவ்வாறு விளையாடுவது என்பதை நான் நன்றாகப் புரிந்துகொள்கிறேன் என்று நினைக்கிறேன். மேலும், சில நேரங்களில் விளையாட வேண்டிய வேகத்தையும் என்னால் மாற்றமுடியும் என்று நம்புகிறேன். இருப்பினும் அங்குள்ள மைதானங்களில் விளையாடுவது சற்று கடினமாக இருக்கும் என்று தெரியும். மேலும் அவர்கள் சொந்த மண்ணில் நன்றாக விளையாடுகிறார்கள், குறிப்பாக விக்கெட்டுகள் திரும்பும் நிலைமைகாளில்.

அதனால் எங்காள் பேட்டர்களுக்கு தேவையான திட்டங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். மேலும் வித்தியாசமான முறையை கையாண்டால் மட்டுமே நம்மால் அங்கு ரன்களைச் சேர்ப்பதுடன் விக்கெட்டையும் இழக்காமல் பார்த்துகொள்ள முடியும். ஆஸ்திரேலியாவில் சுழற்பந்து வீச்சை விளையாடுவது மிகவும் வித்தியாசமானது. அதனால் திட்டம் எதுவாக இருந்தாலும், அதனை முதல் பந்திலிருந்தே நாம் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை நிறைவு செய்வார். அவர் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 204 இன்னிங்ஸ்களில் 9999 ரன்கள் எடுத்துள்ளார்.  இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் (13378 ரன்கள்), ஆலன் பார்டர் (11174 ரன்கள்), ஸ்டீவ் வாக் (10927) ஆகியோர் மட்டுமே 10ஆயிரம் ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை