இனியும் இந்த சத்தம் எங்களது வெற்றிகளின் மூலம் அதிகரிக்கும் - ரோஹித் சர்மா!

Updated: Thu, Oct 19 2023 22:38 IST
Image Source: Google

நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

இதனைத்தொடர்ந்து முதலில் விளையாடி அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திரா ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 103 ரன்களையும், ஷுப்மன் கில் 52 ரன்களையும், கேப்டன் ரோஹித் சர்மா 48 ரன்களையும், கேஎல் ராகுல் 34 ரன்களையும் சேர்த்தனர். இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த விராட் கோலி ஆட்டநயாகன் விருதையும் வென்றார். 

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “உண்மையிலேயே இந்த வெற்றி மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. இது போன்ற ஒரு வெற்றியைத் தான் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக தொடங்கவில்லை என்றாலும் மிடில் ஓவர்களிலும் பின் வரிசையிலும் எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி வங்கதேச அணியை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதோடு நடைபெற்று வரும் இந்த தொடரில் எங்கள் அணியின் பீல்டிங்கும் மிகச் சிறப்பாக உள்ளது. பீல்டிங் மட்டுமே நமது அணியை எப்பொழுதும் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஒன்றாக உள்ளது. இந்த போட்டியில் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். அதிலும் குறிப்பாக ஜடேஜா அற்புதமாக செயல்பட்டார்.

பந்துவீச்சில் மட்டும் இன்றி அவர் பீல்டிங்கிலும் நன்றாகவே செயல்பட்டார் இருந்தாலும் விராட் கோலி அடித்த சதம் அதனை கடந்து விட்டது. ஒரு அணியாக நாங்கள் இப்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு பதக்கம் வழங்குவது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தி சிறப்பாக செயல்பட வைக்கும் என்பதால் கொடுக்கப்படுகிறது.

இந்திய அணி விளையாடும் போட்டிகளை காண பெருமளவில் ரசிகர்கள் நேரில் வந்து எங்களை ஆதரிக்கின்றனர். எப்போதுமே அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் வெற்றி பெறவே விரும்புகிறோம். இனியும் இந்த சத்தம் எங்களது வெற்றிகளின் மூலம் அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை