மாஸ்டர்ஸ் லீக் 2025: உபுல் தரங்கா சதம்; ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸை வீழ்த்திய இலங்கை மாஸ்டர்ஸ்!

Updated: Sat, Mar 01 2025 09:00 IST
Image Source: Google

ஓய்வு பெற்ற வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் மற்றும் இலங்கை மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை மாஸ்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் ஷேன் வாட்சன் - ஷான் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷேன் வாட்சன் 16 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷான் மார்ஷ் - பென் டங்க் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமலவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

பின்னர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 56 ரன்களைச் சேர்த்த கையோடு பென் டங்க் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டேனியல் கிறிஸ்டியன் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 77 ரன்களை விளாசி இருந்தா ஷான் மார்ஷும் விக்கெட்டை இழக்க, ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் உதானா, பிரசாத், சதுரங்கா மற்றும் குணரத்னே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு உபுல் தரங்கா மற்றும் கேப்டன் குமார் சங்கக்காரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சங்கக்காரா 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் உபுல் தரங்காவுடன் இணைந்த லஹிரு திரிமானே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 53 ரன்களில் திரிமானே ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் சோபிக்க தவறினர். 

Also Read: Funding To Save Test Cricket

இருப்பினும் மறுபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய உபுல் தரங்கா சதமடித்து அசத்தியதுடன் 8 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 102 ரன்களைச் சேர்க்க, இலங்கை மாஸ்டர்ஸ் அணியானது 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் இலங்கை மாஸ்டர்ஸ் அணி இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை