BAN vs IND, 2nd ODI: காயத்துடன் போராடிய ரோஹித்; கடைசி பந்தில் வெற்றிபெற்ற வங்கதேசம்!

Updated: Wed, Dec 07 2022 20:48 IST
IND V BAN, 2nd ODI: Shreyas, Axar, Rohit Fifties Go In Vain As India Lose To Bangladesh By 5 Runs (Image Source: Google)

இந்தியா - வங்கதேசம் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. 

தாக்காவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷபாஸ் அகமது, குல்தீப் சென் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஸர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டனர்.

அதன்படி முதலில் பேட்டிங்  ஆடிய வங்கதேச அணியின் பேட்டிங் ஆர்டர் இந்திய பவுலர்களிடம் சரணடைந்தது. தொடக்க வீரர்கள் அனாமுல் ஹக் (11), லிட்டன் தாஸ் (7) ஆகிய இருவரையும் சிராஜ் வீழ்த்த, 3ஆம் வரிசையில் இறங்கிய நஜ்முல் ஹுசைனை (21) உம்ரான் மாலிக் வீழ்த்தினார்.  ஷகிப் அல் ஹசன் (8), முஷ்ஃபிகுர் ரஹிம் (12), அஃபிஃப் ஹுசைன்(0) ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்த,19 ஓவரில் 69 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி.

அதன்பின்னர் மஹ்மதுல்லாவும் மெஹிடி ஹசனும் ஜோடி சேர்ந்து அபாரமாக பேட்டிங் ஆடினர். இக்கட்டான சூழலில் வங்கதேச அணி இருந்தநிலையில், பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை காப்பாற்றினர். மஹ்மதுல்லா - மெஹிடி ஹசன் ஜோடி பொறுப்புடன் பேட்டிங் ஆடி, 7வது விக்கெட்டுக்கு 148 ரன்களை குவித்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடிய மஹ்மதுல்லா 77ரன்களுக்கு 47வது ஓவரில் ஆட்டமிழந்தார். 

முதல் போட்டியில் அபாரமாக பேட்டிங் விளையாடி வங்கதேசத்துக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த மெஹிடி ஹசன், இந்த போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 83 பந்தில் சதமடித்த மெஹிடி ஹசன், கடைசி வரை களத்தில் நின்று வங்கதேச அணிக்கு இன்னிங்ஸை சிறப்பாக முடித்து கொடுத்தார். 19 ஓவரில் 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய வங்கதேச அணி, மெஹிடி ஹசனின் அபாரமான சதத்தால் 50 ஓவரில் 271 ரன்களை குவித்தது. 

272 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் என்பதால், ஷிகர் தவானுடன் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்கினார். இதில் தவான் (8), கோலி (5) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் (11), கேஎல் ராகுல் (14) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக பேட்டிங் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயருடன் 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடினார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டதுடன், இந்திய அணியையும் தவிக்கவிட்டுச்சென்றார். 

அக்ஸர் படேல் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷர்துல் தாகூரும் (7) ஆட்டமிழக்க, வேறு வழியின்றி காயத்துடன் வலியை பொறுத்துக்கொண்டு பேட்டிங் ஆடவந்த ரோஹித் சர்மா, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட, முதல் 4 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் அடித்தார் ரோஹித். 

முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய அந்த கடைசி ஓவரின் கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்கள் தேவைப்பட்ட நிலையில், 5ஆவது பந்தில் சிக்ஸர் அடித்த ரோஹித்தால் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க முடியவில்லை. 28 பந்தில் ரோஹித் 51 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை