IND vs NZ, 1st Test: ஸ்ரேயாஸ் அரைசதம்; நியூசி பந்துவீச்சாளர்கள் அபாரம்!
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 345 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 296 ரன்கள் சேர்த்தது.
49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. மயங்க் அகர்வால் 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கினர்.
புஜாரா 23 ரன்கள் எடுத்த நிலையிலும், மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரகானே 4 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த ஜடேஜா ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனால் இந்தியா 51 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அதன்பின் 6ஆவது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர் உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின் 32 ரன்கள் எடுத்திருந்த அஸ்வினும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் அடித்து ஆறுதலளித்தார். பின் 65 ரன்களுக்கு ஸ்ரேயஸ் ஐயரும் சௌதி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் நான்காம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் விருத்திமான் சஹா 22 ரன்களுடன் விளையாடிவருகிறார். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன், சௌதி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.