IND vs AFG, 1st T20I: முகமது நபி அபார ஆட்டம்; இந்தியாவுக்கு 159 டார்கெட்!

Updated: Thu, Jan 11 2024 20:36 IST
IND vs AFG, 1st T20I: முகமது நபி அபார ஆட்டம்; இந்தியாவுக்கு 159 டார்கெட்! (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாடும் கடைசி டி20 தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டியானது இன்று மெஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் முதல் ஒருசில ஓவர்கள் தடுமாறினாலும், அதன்பின் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் 25 ரன்களை எடுத்த நிலையில் ஷிவம் தூபேவின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

இவர்களைத் தொடர்ந்து தனது அறிமுக போட்டியில் விளையாடிய ரஹ்மத் ஷா வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் - முகமது நபி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஒருகட்டத்திற்கு மேல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து சிக்சர்களையும், பவுண்டரியையும் விளாசியதோடு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் குறுகிய கட்டத்தில் கடந்து மிரட்டினர். 

அதன்பின் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்கள் எடுத்திருந்த அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது நபி 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்களை எடுத்த நிலையில் முகேஷ் குமாரின் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். இறுதியில் நஜிபுல்லா ஸத்ரான் மற்றும் கரிம் ஜானத் ஒரு சில பவுண்டரிகளை அடித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நஜிபுல்லா ஸத்ரான் 19 ரன்களையும், கரிம் ஜானத் 9 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை