ஆஃப்கானிஸ்தன் தொடருக்கு இரண்டாம் நிலை அணியை தேர்வு செய்த பிசிசிஐ!

Updated: Sat, May 27 2023 15:17 IST
Image Source: Google

இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கும் கிரிக்கெட் தொடா் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், மாற்று திட்டத்துடன் அந்தத் தொடரை நடத்த பிசிசிஐ ஆலோசிப்பதாகத் தெரிகிறது. கடந்த 2 மாதங்களாக இந்திய வீரா்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருக்கும் நிலையில், அதைத் தொடா்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக இங்கிலாந்து செல்லவுள்ளனா். அதன் பிறகு இந்திய அணி ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரை வெஸ்ட் இண்டிஸ் பயணம் மேற்கொள்கிறது.

அதில், 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் இரு அணிகளும் மோதவுள்ளன. இதையடுத்து இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயா்லாந்து செல்கிறது. பின்னா் செப்டம்பரில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு, 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதையடுத்து அக்டோபா் நவம்பரில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

இதனிடையே, ஆஃப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அணிகளிடையேயான கிரிக்கெட் தொடருக்கும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்திய அணி வீரா்கள் இந்த ஐபிஎல் முதல் உலகக் கோப்பை போட்டி வரை ஓய்வின்றி தொடா்ந்து விளையாட வேண்டிய நிலை இருப்பதால், ஆஃப்கன் தொடரை பிசிசிஐ கைவிடும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 20 முதல் 30 வரையிலான காலகட்டத்தில்  ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள், டி20 தொடா்களை நடத்தவும், ரோஹித், கோலி போன்ற மூத்த வீரா்களுக்கு ஓய்வளித்து பாண்டியா தலைமையிலான 2ஆம் நிலை அணியை அந்தத் தொடரில் விளையாடச் செய்யவும் பிசிசிஐ திட்டமிடுவதாகத் தெரிகிறது. 

மேலும், அந்த அட்டவணையில் டி20 அல்லது ஒரு நாள் தொடரை மட்டும் நடத்தவும் பிசிசிஐ பரிசீலிப்பதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனும் பேச்சு நடத்தவுள்ளது. அதேபோல், அயா்லாந்துடனான டி20 தொடரிலும் பிரதான இந்திய வீரா்களுடன் பாண்டியாவுக்கும் ஓய்வளித்து, ஐபிஎல் போட்டியில் ஜொலித்த வீரா்களைக் களமிறக்கவும் பிசிசிஐ யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை