IND vs AUS 2nd T20I: மீண்டும் மிரட்டிய மெக்ராத், மூனி; இந்தியாவுக்கு இமாலய இலக்கு!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு வழக்கம்போல கேப்டன் அலிசா ஹீலி - தாஹிலா மெக்ராத் இணை அதிரடியான தொடக்கத்தைக் கடுத்தனர். இதில் அலிசா ஹீலி 25 ரன்களை எடுத்த நிலையில் தீப்தி சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த தஹிலா மெக்ராத் - பெத் மூனி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரிகளாக விளாசி தள்ளினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர் திணறினர்.
ஆனால் அதிரடி ஆட்டத்தில் மிராட்டிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 150 ரன்களையும் பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்து அணியை வலிமையான இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 187 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தஹிலா மெக்ராத் 70 ரன்களையும், பெத் மூனி 82 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா மட்டுமே ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.