IND vs AUS, 2nd T20I: ஆஸியை வீழ்த்தி தொடரில் முன்னிலைப் பெற்றது இந்தியா!
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கெய்க்வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து பவுண்டரிகளாக விளாசி 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 53 ரன்கள் எடுத்த நிலையில் கெய்வாட் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இஷான் கிஷானும் தனது பங்கிற்கு சிக்சர்களை பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய இஷான் கிஷன் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 52 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் நிதானமாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்வாட்டும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
ஆனால் மறுபக்கம் அதிரடியாக தொடங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரிங்கு சிங் வழக்கம்போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ஃபினீஷிங்கைக் கொடுத்தார். அதேசமயம் மறுப்பக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த ருதுராஜ் கெய்வாட் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் - மேத்யூ ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் 19 ரன்களில்ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்கிலிஸும் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரவி பிஷ்னோய்பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித் 19 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் - டிம் டேவிட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிம் டேவிட் 2 சிக்சர், 4 பவுண்டரி என 37 ரன்களுக்கும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 45 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தறவிட்டனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் மேத்யூ வேட் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய சீன் அபோட், ஆடம் ஸாம்பா, நாதன் எல்லிஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் இறுதிவரை போராடிய கேப்டன் மேத்யூ வேட் 23 பந்துகளில் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என 42 ரன்களை எடுத்த நிலையிலும், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவி பிஷ்னோய், பிரஷித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.